2002ஆம் ஆண்டு விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் இருசப்பன் என்பவர் உடல் நலக்குறைவால் கடலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலையில் அந்த மருத்துவமனையில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், பாதுகாப்புக்கு நின்ற காவலர் செந்தில்குமார் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த இருசப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது கை, கால், தலையில் பலத்த வெட்டு விழுந்தது.
இதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட காவலர் செந்தில்குமார், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மர்ம கும்பலை நோக்கி சுட்டார். ஆனால் குண்டு அந்த மர்ம கும்பல் மீது படவில்லை. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப்குமார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து நேரடி விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனை பெறும் பரபரப்புடன் காணப்பட்டது.