தமிழக டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

வியாழன், 6 நவம்பர் 2008 (04:43 IST)
திருநெல்வேலி மாவட்டம் பந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் 200 பேரை உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர், கிராமத்தை விட்டு வெளியேற்றியதாக கூறப்படும் தகவலைத் தொடர்ந்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான செய்தியின் அடிப்படையில், தன்னிச்சையாக மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

அந்த சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

70 குடும்பங்களைச் சேர்ந்த தலித் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், அந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு உயர் ஜாதியினரால் கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் காரிசாத்தான் கிராமத்தில் மலையடிவாரத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு பிரிவினருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாகவே மோதல் நீடித்து வருவதாகவும், தலித் மக்களை கண்ணநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குள் செல்ல எதிர்தரப்பினர் அனுமதிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் அனுமதிக்குமாறு கிராம நிர்வாக அதிகாரிக்கும், காவல்துறையினருக்கும் சங்கரன்கோயில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கோயிலுக்குச் சென்ற தலித் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கோயிலின் பூசாரி தலித் மக்கள் வராமல் இருக்கும்பொருட்டு, கோயிலைப் பூட்டி சாவியை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே, அதுபற்றி விளக்கம் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தற்போது தாக்கீது அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்