பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை போக்க, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாக காவல்துறையினரின் ஆய்வுக்கு அனுப்பும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், இனி, விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
முதன்முறையாக புறநகர் மாவட்டப் பகுதிகளில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் அனைத்தையும் "இ-மெயில்' மூலம் பெற்று, 3 நாள்களில் உளவுப் பிரிவு காவல்துறையினர் சரிபார்த்து, விசாரணை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொதுவாக "தட்கல்' முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே 3 முதல் 5 நாட்களுக்குள் இப்போது பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை "தட்கல்'' முறையில் 70 ஆயிரம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகக் கூறினார்.
சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 நாட்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் 17 அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்றார் அவர்.
முன்னதாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதான காவல்துறையினரின் சரிபார்ப்பு மற்றும் விசாரணையை 3 நாட்களுக்குள் விரைந்து முடிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து புறநகர் மாவட்ட காவல் ஆணையர் ஜாங்கிட் பேசினார்.
பாஸ்போர்ட் விசாரணை முடிவதில் தாமதம் ஏற்படுவதற்கு போலீசாரைக் காரணம் கூறுவது சரியல்ல. விண்ணப்பதாரர்கள் மீதான விசாரணையைப் போலீசார் உடனுக்குடன் முடித்து அறிக்கையை அனுப்புவதாகவும், இப்போது "இ-மெயில்'' மூலம் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்களைப் பெற்று சரிபார்த்து, 3 நாள்களில் விசாரணை முடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.