இலங்கை தமிழர் பிரச்சினை: தங்கபாலு பேட்டி!

புதன், 5 நவம்பர் 2008 (22:36 IST)
புதுடெல்லி வரவிருக்கும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே-விடம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு வலியுறுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் புதனன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக, பிரதமருக்கு தங்கபாலு நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அருண் குமாரையும் தங்கபாலு சந்தித்துப் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இலங்கை இன பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பதில், மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் உறுதியுடன் இருப்பதாக தங்கபாலு குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்களின் உரிமை மற்றும் உணர்வுகளுக்கு அந்நாட்டு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ராஜபக்சே-விடம் ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வற்புறுத்தி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மாதம் 13ஆம் தேதி புதுடெல்லி வரும் ராஜபக்சேவிடம் மீண்டும் இதே கோரிக்கையை, மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் தங்கபாலு நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை பிரச்சினையில், இந்தியா அந்த நாட்டு அரசை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்க முடியாது. இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் உண்மையான ஈடுபாடு காட்டினால்தான் சண்டை முடிவுக்கு வந்து, அமைதி திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேறொரு தேதியில் இந்தக் கூட்டம் நடத்தப்படும் என்றும் தங்கபாலு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்