பாதுகாப்பு மறுஆய்வு குழுவின் முடிவு மற்றும் அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று சமர்ப்பித்தது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு இன்று நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை அரசு வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி ஆஜராகி, பாதுகாப்பு மறுஆய்வு குழுவின் முடிவு மற்றும் அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் அவர் வாதிடுகையில், கடந்த 30ஆம் தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்திற்கு வராமல் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தார். அந்த நேரத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கற்களை வீசப்பட்டன.
அந்த நேரம் பார்த்து ஜெயலலிதா அங்கு வந்ததால் கற்கள் அவர் இருந்த பகுதியிலும் வந்து விழுந்தது. ஆயினும் அவரை காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் மலைச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
இதை தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு தர தமிழக அரசு விரும்பவில்லை என்றும் ஆளும் கட்சியினராலும், தீவிரவாத அமைப்புகளாலும் அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. தேவைப்பட்டால் அவரை பாதுகாக்க அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார் நவநீத கிருஷ்ணன்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு மறுஆய்வுக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு தேவை ஏற்பட்டால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.