மின்வெட்டை கண்டித்து மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
புதன், 5 நவம்பர் 2008 (14:41 IST)
மின்வெட்டை கண்டித்து மதுரையில் நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்வெட்டு காரணமாக, மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே கலப்பை மற்றும் இதர விவசாயக் கருவிகள் மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள மேலூரில் தான் தயாரிக்கப்படுகின்றன. கடும் மின்வெட்டு காரணமாக இதன் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதால் இத்தொழில் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளகப்பலூர், உறங்கான்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள சிறுதொழில் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு, வேலை இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன.
இது தவிர, மாணவ- மாணவியர், குழந்தைகள், முதியோர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் மின்வெட்டால் அன்றாடம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அ.இ.அ.தி.மு.க. மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், நாளை (6ஆம் தேதி) காலை 10 மணி அளவில், திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.