இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் : திருமாவளவன்!

புதன், 5 நவம்பர் 2008 (10:13 IST)
ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் போரை நிறுத்துவதற்கான அடையாளங்களே தெரியவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே இந்திய அரசு மதிக்கவில்லை எ‌ன்று‌ம் இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சிங்கள இனவெறிக் கும்பலின் பயங்கரவாதத்திற்கு ஆளாகி அழிந்து வருகிறார்கள். தமிழினம் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு இலக்காகி சின்னாபின்னமாகச் சிதைந்து வருகிறது. இந்நிலையில் மனிதநேய அடிப்படையிலாவது, இந்த இனப்படுகொலையைக் கண்டித்து குரலெழுப்ப தான் தற்போது தமிழகமே கொந்தளித்து எழுந்துள்ளது.

''இந்திய அரசே போரை நிறுத்து'' என்னும் ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்திக் குரலெழுப்பி வருகிறது. எனினும் இந்திய அரசு வழக்கம்போல, தமிழகத்துக் குரலைப் பொருட்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருகிறது.

இலங்கை இராணுவ ஆலோசகர் பாசில் ராஜபக்சே டெல்லிக்கு வந்தும், மத்திய அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி தமிழகத்துக்கு வந்தும் பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும், ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் போரை நிறுத்துவதற்கான அடையாளங்களே தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே இந்திய அரசு மதிக்கவில்லை. இன்றுவரை இந்திய அரசின் போக்கு தமிழினத்திற்கு எதிராகவே அமைந்துள்ளது. இந்திய அரசு போரை நடத்துவதற்காக அல்ல; போரை நிறுத்துவதற்காகத் தலையிட வேண்டுமென அழுத்தமாகவே தமிழகம் வற்புறுத்துகிறது.

இதை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6ஆ‌ம் தேதி மகளிர் விடுதலை இயக்கத்தின் முன்முயற்சியில் உண்ணாவிரத போராட்டமும், 11ஆ‌ம் தேதி தொழிலாளர் விடுதலை முன்னணியின் தொடர் முழக்கப் போராட்டமும், 18ஆ‌ம் தேதி முற்போக்கு மாணவர் கழகத்தின் பேரணி மற்றும் பொதுக் கூட்டமும் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள் அனைத்தும் `இந்திய அரசே போரை நிறுத்து' என்ற ஒற்றை முழக்கத்தை வலியுறுத்தியே நடைபெறுகிறது'' எ‌ன்று ‌தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.