இலங்கைத் தமிழர் பிரச்சனை : நவ.14இல் நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி!
செவ்வாய், 4 நவம்பர் 2008 (16:24 IST)
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும், இப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணக்கோரியும் வரும் 14ஆம் தேதி புதுடெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் (AISF) தேசிய பேரவை சார்பில் மிகப்பிரம்மாண்டமான பேரணி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதன் பொதுச் செயலர் விஜயேந்திர கேசரி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுடெல்லியில் நடைபெற இந்த பேரணிக்காக தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், தேசியச் செயலர் டி.ராஜா உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த வலியுறுத்தியும், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியாவில் கல்வி வியாபாரமாகி விட்டதை தடுக்கக் கோரியும் இந்த பேரணி நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.