ஈரோடு மாவட்டத்தில் கடும் மூடுபனி : நெற்பயிர்கள் பாதிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் மூடுபனியின் காரணமாக நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்துள்ளது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போதுதான் நடவுதிரும்பி வளரும் பருவத்திற்கு வந்துள்ளது. பல இடங்களில் ஒற்றை நாற்று முறையில் அதிகமாக நடவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கடும் மூடுபனி ஏற்பட்டு வருகிறது. இரவு ஆறு மணிமுதல் அதிகாலை ஒன்பது மணிவரை மூடுபனியின் தாக்கம் காணப்படுகிறது. நகர் பகுதிகளை காட்டிலும் கிராம பகுதிகளில் பனி அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக நெற்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மூடுபனி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது நெற்பயிரின் பருவத்திற்கு மூடுபனி அறவே ஆகாது. ஆனால் அதற்கு எதிர்மாறாக மூடுபனியினால் நெற்பயிர்கள் நனைந்து பனிதண்ணீர் சொட்டிகொண்டுள்ளது. காலை நேரத்தில் பத்து மணிவரை இந்த பனிநீர் நெற்பயிர்களில் காணப்படுகிறது.
மேலும் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் மல்லிகை பூ பறிக்கும் தொழிலாளர்களும் இந்த மூடுபனியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை மூன்று மணிக்கு மல்லிகை வயலுக்குள் பூ பறிக்க செல்லும் இந்த தொழிலாளர்கள் பனியில் கைவைத்த சில நிமிடங்களில் கை மறத்துவிடுகிறது என்கின்றனர். இதனால் சிலர் கை உரை அணிந்து பூ பறிக்கின்றனர். இதனால் பூ பறிக்கும் வேகம் குறைவதால் விவசாயிகளுக்கு கூலி அதிகரிக்கிறது என்கின்றனர்.