ஏழை, எளியவர்கள், பெண்கள், ஏதுமறியா குழந்தைகளைக் கொல்லும் எந்தவொரு நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை என்றும், இதனை உணர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ச அந்நாட்டில் போரை நிறுத்த வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் கோரியும், சென்னையில் நடிகர்கள் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இவ்வாறுக் குறிப்பிட்டார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு சம உரிமையைக் கோருகிறார்கள். இங்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் கூடி இலங்கை அரசுக்கு எதிராக எதையும் பேசக்கூடாது என்று தெரிவித்தனர். இங்கு வந்துள்ள இலங்கை எம்.பி-க்கள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் நமது எதிர்ப்பு அவர்களுக்குத் தெரியத்தான் போகிறது.
அந்தவகையில் இலங்கை அதிபர் ராஜ்பக்சவுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அப்பாவி ஏழை, எளியவர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டால் அந்த நாடு ஒருபோதும் உருப்படாது.
அது, இலங்கை என்றல்ல, எந்த நாடாக இருந்தாலும், பெண்கள், குழந்தைகளின் உதிரம் மண்ணில் சிந்தப்படுமானால், நிச்சயம் அவர்களின் வேதனை காரணமாக அந்த நாடு முன்னேற்றத்தைக் காண முடியாது.
இலங்கையில் தமிழர்களைக் கொன்று புதைப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், பிணங்களை புதைக்கவில்லை, விதைக்கிறார்கள். அந்த விதை மீண்டும் வந்து, தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் வரை விடாது துரத்தும்.
எனவே, இந்த நிலையை உணர்ந்து ராஜபக்ச அரசு, இலங்கையில் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும். அப்படி போர் நிறுத்தப்படாவிட்டால், போரை நிறுத்துவதற்கு மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ரஜினிகாந்த் கூறினார்.
இலங்கை தமிழர்களுக்கு நிதியாக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற போதிலும், தமது பங்காக 10 லட்சம் ரூபாயை வழங்குவதாகவும் ரஜினி கூறினார்.