தமிழகத்தில் ஏற்கனவே 3 கட்டங்களாக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 4ஆவது கட்டமாக தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாகவும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தாலுகா அலுவலகத்தைத் திறந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசிய ஸ்டாலின், 4-ஆவது கட்டமாக 4 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்.
அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட வேண்டும் என்ற முதல் அமைச்சர் கருணாநிதியின் உத்தரவிற்கிணங்க, அனைத்துப் பகுதிகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படவில்லை என்று வெளியான தகவலை மறுத்த அவர், தேவைப்பட்டால் 5ஆவது கட்டமாகவும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.