மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த்!

சனி, 1 நவம்பர் 2008 (13:28 IST)
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதலை தடுத்து நிறுத்தவும், அந்நாட்டில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வலியுறுத்தியும் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசுகையில், விஜயகாந்த் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த மேடையில் அரசியலோ அல்லது இலங்கை அரசைக் கண்டித்தோ, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தோ பேசக்கூடாது என்று கண்டிப்புடன் கூறி விட்டதால், தன்னால் அரசியல் பேச முடியாது என்று அவர் கூறினார்.

இலஙகை அரசை வேண்டுமானால், நாம் கண்டித்துப் பேச முடியாது என்று கூறிய அவர், மத்திய-மாநில அரசுகளை தட்டிக் கேட்கும் உரிமை நமக்கு உள்ளது என்றார்.

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள அனைவருக்கும், மத்திய-மாநில அரசுகளை விமர்சிக்கும் உரிமை உண்டு என்று விஜயகாந்த் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதில் மனிதப் பண்புகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், விமானங்களில் இருந்து அந்நாட்டு ராணுவத்தினர் குண்டுகள் வீசுவதை தடுக்க வேண்டும் என்றார்.

இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே உணவு, உடை, மருந்துகளை அனுப்பி வைக்கிறோம். ஆனால், தொடர்ந்து தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார்களே. அதற்கு என்ன தீர்வு? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் உண்ணாவிரத மேடைக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்று கூறினார்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே திமுக அரசு மனிதச் சங்கிலி அணிவகுப்பை நடத்தி, தற்போது நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்திருப்பதாகவும் விஜயகாந்த் குறை கூறினார்.

உணவு, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவதால் நிரந்தரத் தீர்வு காண முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்