இது கால‌த்‌தி‌ன் க‌ட்டாய‌ம்: ஜெயலலிதா!

சனி, 1 நவம்பர் 2008 (05:24 IST)
பசும்பொன் பிரச்சனை குறித்து அரசியல்வாதிகளை போல காவ‌ல்துறை அதிகாரிகள் அறிக்கை விடுவது வரம்பு மீறிய செயல்மட்டுமல்ல, சட்டவிரோதமான செயல் என்று‌‌‌ம் இதற்கெல்லாம் பதில் சொல்லுகின்ற காலம் வந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்'' எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 101-வது பிறந்த நாளையொட்டி 30.10.2008 அன்று நான் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற போது, என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இது, கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட சதித்திட்டம் என்றும், காவல் துறையினரால் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும், சென்னை விமான நிலையத்தில் தொலைக்காட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்களிடத்தில் நான் பேட்டி அளித்தேன்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், `காவல்துறை இயன்றவரை தனது கடமையை செய்திருக்கிறது. எங்களால் எவ்வளவு பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறோம்' என்ற அளவில் பேட்டி அளித்திருக்கிறார். மிகப்பெரிய பொறுப்புள்ள உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை தலைமை இயக்குநரின் பேட்டி மிகவும் துரதிருஷ்டவசமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது; பொறுப்பற்றது மட்டுமன்றி கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும்.

நான் தேவர் திருமகனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்த போது, எனது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முற்பட்டனர் என்றும், அதனை காவல் துறையினர் தடுக்க முயற்சித்த போது, காவல் துறையினர் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கியுள்ளனர் என்றும் உண்மைக்குபுறம்பான அறிக்கையை சட்டம்-ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எனது கட்சிக்காரர்கள் எனது வாகனத்தின் மீதே கல்வீச்சு நடத்தியுள்ளார்கள் என்று கூறுவது மிகவும் நகைப்புக்குரியது மட்டுமல்ல, யாரும் இதுவரை கேட்டிராத ஒன்று. முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள எனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல் துறையின் தலையாய கடமை. தன்னுடைய கடமையை செய்வதை விட்டுவிட்டு, பொறுப்புள்ள காவல் துறை அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளிப்பது, ஆளும் கட்சியினர் சொல்கின்றபடி அறிக்கை விடுவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எனது பாதுகாப்பு குறித்து அரசியல் வாதிகளைப் போல் காவல் துறை அதிகாரிகள் பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும் வரம்பு மீறிய செயல் மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலும் கூட. இது மட்டும் அல்லாமல், எனக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்.

கடந்த 29 மாத காலமாக வன்முறை கும்பல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதல்களுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இதற்கெல்லாம் பதில் சொல்லுகின்ற காலம் வந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.