தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்புகையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு வந்த கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அக்கட்சியினர் இன்று மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் பேருந்துகள் உடைக்கப்பட்டன.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 101-வது குருபூஜை மற்றும் பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று காரில் சென்றார். அவர் மலர் அஞ்சலி செலுத்துவதற்காக காரில் இருந்து இறங்கிச் சென்ற நேரத்தில், அங்கு கூடியிருந்தவர்கள் முண்டியடித்ததால், மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் கார் மீதும், ஜெயலலிதா வந்த கார் மீதும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை, கும்பகோணம், வலங்கைமான், தர்மபுரி, விழுப்புரம், செஞ்சி,கடலூர் உள்பட பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செஞ்சி, திருவண்ணமலை ஆகிய இடங்களில் 3 பேருந்துகள் மீது கல்வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.