கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப் பேட்டை தாலுகாவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தோடு, இணைத்து அரசாணை வெளியிட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்து, உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே அஇஅதிமுக நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உடுமலைப்பேட்டை பகுதி மக்களின் கருத்துகளை அறிந்து அதற்கேற்ப அரசாணையை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வரும் 1-ந் தேதி (நவம்பர்) காலை 10 மணி அளவில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அப்பகுதி தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்குவார் என்றும் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.
அவைத் தலைவர் சண்முகவேலு, மாவட்டச் செயலாளர் வேலுமணி முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அஇஅதிமுக-வினர் பங்கேற்குமாறும் ஜெயலலிதா அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.