திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்த 60 சவரன் தங்கநகை, 6 கிலோ வெள்ளி, 6 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
திருப்போரூரையடுத்த செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி செல்வகுமாரி. இவர்களின் மகன் தியாகராஜனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தியாகராஜன் தலைதீபாவளி வந்தவாசியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.
தட்சிணாமூர்த்தியும், அவரது மனைவியும் திருச்சந்தூர் முருகன் கோயிலில் 10 நாள் தங்கி சஷ்டி விரதம் எடுப்பது வழக்கம் என்பதால், அவர்கள் இருவரும் திருச்சந்தூர் சென்று விட்டனர்.
தியாகராஜனும், அவரது மனைவி இலக்கியாவும் தலை தீபாவளியைக் கொண்டாடி விட்டு செம்பாக்கத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு திறந்து கிடந்ததுடன், பூட்டு உடைக்கப்பட்டு, 2 பீரோக்களும் திறந்துக் கிடந்ததைப் பார்த்து போலீசில் புகார் கொடுத்தனர்.
காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்த நாய் யாரையும் சென்று பிடிக்கவில்லை.
மொத்தம் 60 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள், 6 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.