இலங்கை தமிழர் நிவாரண நிதி ரூ. 89 லட்சமானது!

புதன், 29 அக்டோபர் 2008 (15:16 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி சுமார் 89 லட்சம் ரூபாயை எட்டியிருக்கிறது.

இலங்கையில் அந்நாட்டு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு ஆளாகி, உண்ண உணவின்றி, தங்க உறைவிடமின்றி பரிதவிக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களைத் திரட்டி, அந்நாட்டிற்கு அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் பங்காக 800 டன் உண்வுப் பொருட்களை அனுப்பி வைக்கும் என்று சென்னையில் கடந்த ஞாயிறன்று முதல் அமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட பொருட்கள் மற்றும் நிதியுதவியை அளிக்க வேண்டும் என முதல் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தமது சொந்த நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அளித்து தொடங்கி வைத்தார்.

மத்திய-மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

நேற்று வரை 33 லட்சத்து ஆறாயிரத்து 750 ரூபாய் நிதி திரட்டப்பட்டிருந்தது.

இன்று தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதல்வரிடம் வழங்கினார்.

மாலினி பார்த்தசாரதி, இயக்குனர், நடிகர் சுந்தர் சி, குஷ்பூ ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

இன்று பிற்பகல் வரை இந்த நிதிக்கு கூடுதல் தொகையாக 88 லட்சத்து 86 ஆயிரத்து 307 ரூபாய் சேர்ந்திருப்பதாக மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்