நவ. 3ல் சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி விழா தொடங்கியது!

புதன், 29 அக்டோபர் 2008 (13:35 IST)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருசெந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் தலங்களிலும் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 3ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் இன்று தொடங்கிய இந்த விழாவையொட்டி, பிற்பகலில் மூலவர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது.

இதேபோல் திருச்செந்தூர், சுவாமிமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்டமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.

விழாக் காலங்களில் தினமும் காலை, இரவு யாகசாலை பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும், மாலையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் ``சூரசம்ஹாரம்'' வரும் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கடுத்த நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

சூரசம்ஹாரம் நடைபெற்றதாகக் கருதப்படும் திருச்செந்தூரில் இன்றிலிருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒருவார காலம் உபவாசம் இருந்து சூரசம்ஹார தினத்தன்று தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டு, அடுத்த நாள் திருக்கல்யாண வைபவத்திலும் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்