பிரணாப் முகர்ஜியின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது: பழ.நெடுமாறன்!
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (23:34 IST)
இலங்கைக்கு ஆயுத உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது என்பது பற்றி அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எதுவும் கூறாதது ஏமாற்றளிப்பதாக தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் நிலவும் பிரச்சனை பற்றி பேச அந்நாட்டு சிறப்புத் தூதராக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்சே கடந்த ஞாயிறு டெல்லி வந்து அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆயுத உதவியை நிறுத்துவது குறித்து எதுவும் சொல்லாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
மேலும், இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் பிரணாப் தெரிவிக்காதது மேலும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. பிரணாப்பின் அறிவிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி கூட்ட வேண்டும்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.