பட்டாசு விலை உயர்வு: ஈரோடில் விற்பனை மந்தம்!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (18:37 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட பட்டாசு விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. விலை உயர்வே இதற்கு காரணம் என வியாபாரிகள் குறைகூறினர்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, காங்கேயம், தாராபுரம், அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி சமயங்களில் சாலை‌பபகுதி மற்றும் பெரும்பாலான கடைகளில் பட்டாசு பிரிவு தனியாக துவங்கி தீவிர விற்பனையில் ஈடுபடுவர்.

கடந்த ஆண்டை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு முப்பது சதவீதம் புது பட்டாசு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் சிந்தாமணி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் தனியாக பட்டாசு பிரிவு அமைத்து விற்பனையில் ஈடுபட்டனர். இந்த வருடம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்ததால், பட்டாசு விற்பனை மந்தமாகவே இரு‌ந்தது.

எப்படியும் தீபாவளிக்கு முந்தைய நாள் பட்டாசு விற்பனை சுறுசுறுப்பாகி விடும் என எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே காணப்பட்டது. காரணம் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் பட்டாசுகளின் விலை 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்ததே என வியாபாரிகள் குமுறுகின்றனர்.

கடந்த ஆண்டு லாபத்தை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் சரக்குகளை வாங்கி‌ப்போட்ட பட்டாசு வியாபாரிகளுக்கு முடிவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்