வன விலங்குகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (18:38 IST)
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள வனகிராமத்தில் வன விலங்குகளை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடி தங்கள் மனித நேயத்தை வெளிப்படுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இது கடல்மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரம் கொண்டது. முழுவதும் வனப்பகுதியால் சூழப்பட்ட இந்த கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுயானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட அனைத்து வகையான வன விலங்குகளும் வசித்து வருகின்றன.
திம்பத்தில் இருந்து பெஜலட்டி வழியாக தலமலை செல்லும் சாலையில் தலமலைக்கு 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ராமரணை என்ற வன கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் 16 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்தும் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்தும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் கிராமங்களை சுற்றிலும் காட்டுயானைகளும், புலியும் அதிகமாக வசித்து வருகின்றன. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பண்ணாரி, ஆசனூர் பகுதியில் இருந்த யானைகள் தற்போது தலமலை, ராமரணை பகுதியில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வனவிலங்குகளை குறிப்பாக காட்டு யானைகளை அச்சுறுத்தக் கூடாது என்ற மனித நேயத்தோடு ராமரணை கிராம மக்கள் யாரும் பட்டாசு வெடிக்கவில்லை. ஒரு வெடிச் சத்தம் கூட இந்த கிராமத்தில் கேட்கவில்லை. கடந்த ஆண்டு இக்கிராம மக்கள் சங்கு சக்கரம் பயன்படுத்தி தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
இந்த வருடம் அதையும் தவிர்த்து பட்டாசு புகையில்லாத தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர். மனிதர்களுக்கு மனிதர்களே இரக்கம் காட்டாத இன்றைய சமூகத்தில் வன விலங்குகளுக்காக தங்கள் சந்தோஷங்களை விட்டுக்கொடுத்த இந்த கிராம மக்களின் மனித நேயத்தை சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.