இலங்கையில் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ் அமைப்புகளின் கூட்டு இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் தொடர் முழக்க போராட்டம் இன்று நடந்தது.
புலவர் முத்து எத்திராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, இலங்கையில் தமிழர்கள் பாது காக்கப்பட வேண்டும். போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பை நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தோம். இப்பிரச்சினையில் முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார் என்று ஜி.கே. மணி கூறினார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் ஒன்றுபட்ட குரல் மேலோங்கி இருப்பதன் மூலம் இந்திய அரசு இலங்கை தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை சுட்டிக்காட்டிய ஜி.கே. மணி, இலங்கையில் தமிழர்களுக்கு 800 டன் உணவு வழங்கவும் முன் வந்துள்ளது. இது ஒருபடி முன்னேற்றம் ஆகும். இன்னும் பல படிகள் ஏற வேண்டி உள்ளது. அதற்கு மத்திய அரசை தமிழக அரசு உடனே வலியுறுத்த வேண்டும் என்றார்.
இலங்கையில் உடனே போரை நிறுத்தவும், அரசியல் தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு எடுத்துள்ள முயற்சி ஓரளவுக்கு திருப்தியாக இருந்தாலும் மேலும் விரைந்து தீர்வுகாண வேண்டும் என்றார் அவர்.