இந்திய இறையாண்மைக்கு விரோதமாகப் பேசியதற்காக கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை இன்று இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், ஆர்.கே. செல்வமணி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இராமேஸ்வரத்தில் அண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் நடத்திய பேரணியின் போது சீமானும், அமீரும் விடுதலைப்புலிகளை ஆதரித்தும், நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் பேசியதாகக் கூறி கடந்த 24ம் தேதியன்று இரவு சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை சென்றனர்.
பின்னர் அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானையும், அமீரையும் சந்தித்துப் பேசினார்கள்.