இலங்கை தமிழர்களுக்கு உதவ கருணாநிதி வேண்டுகோள்!

வியாழன், 30 அக்டோபர் 2008 (14:11 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி பரிதவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவ தமிழக மக்கள் உணவு, உடை உள்ளிட்ட பொருட்களையும், இயன்ற பொருளுதவியையும் வழங்குமாறு முதல் அமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு உத்தரவாதமின்றி, வாழ்வாதாரத்தையும், உடைமைகளையும் இழந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பரிதவித்து வருவதாகவும், அவர்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியும் தந்து உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என நாம் விடுத்த வேண்டுகோளினை ஏற்று, மத்திய அரசு 800 டன்கள் அளவிற்கு நிவாரணப் பொருட்களை இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பிட ஏற்பாடு செய்திருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதாகும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பிலும் இலங்கையில் வாடும் தமிழர்களுக்கு உடனடித் தேவையான உணவுப் பொருள்கள், உடைகள், மருந்துகள் போன்ற நிவாரணப் பொருள்களை விரைவில் அனுப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல் அமைச்சர், அவை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் மத்திய அரசின் மூலம் விநியோகிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும், இலங்கையில் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் சகோதர-சகோதரிகளுக்கு தம்மால் இயன்ற அனைத்தையும் வழங்கி உதவிட முன்வர வேண்டுமென்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

உணவுப் பொருள்கள், உடைகள் போன்றவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும், நிதியுதவி செய்திட விரும்புவோர் "SriLankan Tamils Relief Fund'' என்ற பெயரில் காசோலைகளாகவோ, வரைவோலைகளாகவோ தயாரித்து, தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கருணாநிதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்