எ‌ன்னை கைது செ‌ய்ய முய‌ற்‌சி : ஜெயலலிதா கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!

திங்கள், 27 அக்டோபர் 2008 (12:24 IST)
''என்னைக் கைது செய்யுமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்ற‌ம்சா‌ற்‌றியுள்ளார்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அறிக்கை வெளியிட்டேன். பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் பாரபட்சம் காட்டாமல், சட்டவிரோதமாகச் செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மீண்டும் அறிக்கை விட்ட பிறகு திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும் முக்கியமான இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை. வைகோ, கண்ணப்பன் ஆகியோர் எந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்களோ அதே குற்றத்தைச் செய்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வன்னியரசு, திரைப்பட இயக்குநர் ராம நாராயணன், பாரதிராஜா உள்ளிட்டோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்தப் பிரச்சனையில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியை மத்திய அரசு கைது செய்து, தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் கோரினேன்.

இதனால் கோபம் அடைந்த கருணாநிதி, சனிக்கிழமை காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து உடனே என்னை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக எனக்கு நம்பகமான தகவல் வந்துள்ளது. இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் ஆரம்பத்தில் மெளனமாக இருந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மீண்டும் அதே கட்டளையை வலியுறுத்தியுள்ளார் கருணாநிதி. அப்போது காவல்துறை அதிகாரிகள் "இப்போது ஜெயலலிதாவைக் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லையே? எப்படிக் கைது செய்ய முடியும்?'' என்று கேட்டிருக்கிறார்கள்.

இதைக் கேட்ட கருணாநிதி, கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார். "அதெல்லாம் எனக்குத் தெரியாது! என்ன செய்வீர்களோ தெரியாது! ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி அவரைக் கைது செய்தே ஆக வேண்டும்! சிறையில் வைத்தே ஆக வேண்டும்!'' என்று கூறிவிட்டுப் போய்விட்டாராம்.

இப்படிக் கட்டளையிட்டு கருணாநிதி கோபமாக சென்றுவிட்டதால், காவல்துறை அதிகாரிகள் இப்போது என்ன காரணத்தைக் காட்டி ஜெயலலிதாவைக் கைது செய்வது என தீவிரமாக யோசிப்பதாகக் கேள்விப்படுகிறேன். 10 ஆண்டுகாலம் முதலமை‌ச்சராக இருந்திருக்கிறேன். எனக்கும் உண்மைத் தகவல்களைத் தெரிவிக்க நம்பகமான ஆட்கள் இருக்கிறார்கள். இப்போது இந்தத் தகவல் எனக்கு வந்துள்ளது.

இது எந்த வகையில் நியாயம் என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, உண்மையான நாட்டுப் பற்றுடன் செயல்படுகின்ற, எந்தக் குற்றமும் புரியாத என்னை எப்படியாவது சிறையில் தள்ளத் துடிக்கிறார் கருணாநிதி' எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.