''தேர்தல் வெற்றி எனும் பலம் கிடைத்தால், பல்வேறு பாலங்களை அமைக்கலாம் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்ட கத்திப்பாரா மேம்பாலத்தை திறந்து வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், பாலம் என்றாலே ஒருவரையொருவர் இணைப்பது, இரண்டுபொருள்களை இணைப்பது பாலம், இரண்டு இடங்களை இணைப்பது பாலம். பாலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது இருவருக்கும் இடையே பாலமாக இருக்கிறார் என்று சொன்னால் இருவரையும் ஒற்றுமைப்படுத்தி, ஊருக்கு நன்மை செய்யப்பாடுபடுகிறார் என்று பொருள்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் ஜாதகமோ என்னவோ, அவர் எங்கே பாலம் கட்டினாலும் அதில் ஒரு பிரச்சனை வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஒரு பாலம் கட்டுகிறார், அதிலே எவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். சேது சமுத்திரத் திட்டம் வரையிலே பாலு பணியாற்றுகின்ற பாலு திட்டமிட்டு நடத்துகின்ற பாலங்கள் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கின்றன. அவர் கட்டுகின்ற அந்த பாலம் உச்ச நீதிமன்றம் வரையிலே சென்று தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.
அந்த பாலம் நாம் நினைத்தபடி சேது சமுத்திரத் திட்டத்திற்கான பாலமாக அமைய வேண்டுமேயானால் பாலத்திற்கு கால் ஒடிய வேண்டும், அதாவது பாலத்திற்கு காலை ஒடித்து பார்த்தீர்களேயானால் பாலம், பலம் என்று ஆகும். அந்த பலத்தை நாமெல்லாம்பெற வேண்டும். அந்த பலத்தைப் பெறுவதற்குத் தான் நம்முடைய ஜி.கே.வாசன் சொன்னார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் செய்துள்ள சாதனைகளை யெல்லாம் எண்ணிப்பார்த்து எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தாருங்கள் என்று கேட்டார்கள்.
அது தான் பாலத்தை பலம் என்று ஆக்குதல், அந்த பலத்தை நாம் பெறுவோமேயானால், ஒரு பாலம் அல்ல, சேது சமுத்திரப் பாலம் அல்ல, பல பாலங்கள் நாம் அமைக்க முடியும், அதற்கான வழிவகைகள் உங்களுடைய கையிலே தான் இருக்கின்றன என்று கருணாநிதி கூறினார்.