இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை: தா.பாண்டியன்!
ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (13:45 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திவரும் போரை நிறுத்துமாறு தமிழ்நாடு விடுத்த கோரிக்கையின் மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று இந்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியவர், இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல் அந்நாட்டு உள்நாட்டுச் சிக்கல் என்றால், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது அந்நாட்டுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளைச் செய்துகொண்டது ஏன்? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கோரினார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கும் இன்றும் உறவு இருப்பதாகத் தெரிவித்த பாண்டியன், மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழர்களைக் காக்கும்படி தமிழகக் கட்சிகள் வலியுறுத்துவதாகக் கூறினார்.
“மனித உரிமைகள் மீறப்படும்போது நாடுகளின் எல்லைகள் தடையாக இருக்க முடியாது, இலங்கையைப் பொறுத்தவரை எங்களுக்கு நெருங்கிய உறவு உள்ளது” என்று பாண்டியன் கூறினார்.
“தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காக உணவுப் பொருட்களைத் திரட்டித் தர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு இந்தப் பொருட்களை வழங்குவதற்கான அனுமதியை இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் ராம் பெற்றுத்தரவேண்டும். ஏனெனில் அவர்தான் ராசபக்சாவுடன் அடிக்கடி பேசும் அளவிற்கு தொடர்பு உள்ளவர். தமிழர்களுக்கான உணவுப் பொருட்களை இலங்கை அரசிடம் வழங்க முடியாது, தமிழகத்தைச் சேர்ந்த நடுநிலையாளர்கள் மூலம்தான் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக வழங்கமுடியும்” என்று பாண்டியன் கூறினார்.
இலங்கைக்குச் செல்லவுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தன்னுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களையோ இருவரை உடனழைத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாண்டியன், இலங்கைச் சிக்கல் பற்றிப் பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.