கைது செ‌ய்தபோது வைகோ பே‌சியது!

வியாழன், 23 அக்டோபர் 2008 (22:11 IST)
“சிங்கள அரசு நடத்துகின்ற இனப்படுகொலையை ஊக்குவித்து, அதை இயக்கி வருகிற காரணத்தால், அங்கு தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாவின் மத்திய அரசு, மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் காரணம், அதில் பங்கு வகிக்கின்ற அரசியல் கட்சிகள்தான் காரணம் என்று நான் குற்றம் சாற்றினேன்.

PTI PhotoPTI
இவ்வளவு தமிழர்கள் நான்காண்டு காலமாக கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுதான் காரணம். ஆயுதம் வழங்கி, ராடார் வழங்கி, பணம் கொடுத்து, கப்பல் படைக்கு துப்பு கொடுத்து மொத்த தமிழனத்தையே அழித்தொழிக்க இந்திய அரசு துரோகம் செய்கிறபோது, அந்த துரோகத்தை குற்றம் சாற்றிவிட்டு, நீ ஆயுதம் கொடுத்து தமிழர்களை அழிக்க நினைத்தால் எங்கள் தமிழ் மக்களை காக்க அங்கு போய் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. அது இந்தியாவை எதிர்த்து அல்ல.

நாங்கள் இந்தியாவின் ஒற்றுமையை ஏற்றுக்கொண்டவர்கள். இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பதில் எவருக்கும் நாங்கள் பின்தங்கியவர்கள் அல்ல.

ஆனால் இந்திய அரசு தமிழனத்தை அழிப்பதற்கு இப்படிப்பட்ட துரோகத்தை செய்யுமானால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாடு எதிர்காலத்தில் சிதறுண்டு போகும் என்றுதான் எங்கள் அவைத் தலைவர் சொன்னார்.

இலங்கையைக் காக்க இந்தியாவின் ஒருமைப்பாட்டை பலிகொடுக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன், இதில் எந்தத் தவறும் கிடையாத”.

இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.