சீமான், அமீருக்கு துணை நிற்போம்: சத்யராஜ்!
வியாழன், 23 அக்டோபர் 2008 (17:45 IST)
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசிய விவகாரத்தில் இயக்குனர்கள் சீமான், அமீரை தமிழ் திரையுலகம் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அவர்கள் இவருக்கும் துணை நிற்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் கேட்டுக் கொண்டார்.
சென்னையில் இன்று நடைபெற்ற 'லாடம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், அண்மையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பது பற்றி சிலர் பேசி வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தைதான் நான் வரவேற்கிறேன். அவர் சொன்னது போல் இப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழகத்தில் இருக்க லாயக்கற்றவர்கள்.
இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசவில்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் கட்சி, ஜாதி,மத, இன பாகுபாடின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
இப்போது ஒட்டுமொத்தமாக இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை அரசியல் கட்சிகள் ஓரம்கட்டி வருகின்றனர். அவர்கள் பேசியது பற்றி சரி, தவறு என்று பேசவில்லை. ஆனால், இந்த விடயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் இவர்கள் இருவருக்கும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் எனக்கு இதுபோன்று இரண்டு முறை தனிப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட போது திரையுலகம் எனக்குப் பின்னால் நிற்கவில்லை. திராவிடர் கழகம், விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சிகள்தான் எனக்கு உதவியது. ஈழத் தமிழர்கள் நலனுக்காக அமீரும், சீமானும் பேசியுள்ளனர். எனவே அவர்கள் பின்னால் நாம் அனைவரும் நிற்க வேண்டும் என்று சத்யராஜ் கேட்டுக் கொண்டார்.