இந்திய விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு!

வியாழன், 23 அக்டோபர் 2008 (12:47 IST)
சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்'' என்று பாடி, அன்று மாகவி பாரதி கண்ட கனவை நனவாக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்டு, அதன் முதற்படியாக வெண்ணிலாவை நோக்கி 'சந்திராயன்' விண்கலத்தினை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி, மகத்தான உலக சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் விஞ்ஞானி ஜி.மாதவன் நாயர் மற்றும் அவருக்குத் துணை நின்ற விஞ்ஞானிகள், விண்வெளி அறிஞர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 'சந்திராயன்' விண்கலத்தை உருவாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகிலுள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்பதும், அவர் கடந்த சில மாதங்களாக இரவு பகலாகப் பாடுபட்டு, இந்த 'சந்திராயன்' விண்கலத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் எண்ணி உவகையும், பெருமிதமும் அடைகிறேன்.

இந்திய திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ள அருமைத் தமிழ் விஞ்ஞானி அண்ணாதுரைக்கும் என் பாராட்டுகள் உரித்தாகுக. நிலவை நோக்கி விண்கலம் செலுத்தும் 6-வது நாடாக உலகில் இந்தியா முத்திரை பதித்திட உறுதுணை புரிந்து ஊக்கமளித்து வெற்றி கண்டுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்க்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் உரித்தாகுக'' எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்