தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், பட்டாசுகளின் விற்பனை ஒருவாரத்திற்கு முன்பே அமர்க்களப்படும். ஆனால், இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருவதால், பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே கடந்த சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், சென்னை உட்பட வட தமிழ்நாட்டிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று ஓரளவு குறைந்திருந்த மழை நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதனால், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசலும், மக்கள் தீபாவளிக்கான பொருட்களை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும்.
ஆனால், தீபாவளிக்கு இன்னமும் 5 நாட்களே உள்ள நிலையில், விடாமல் பெய்து வரும் கனமழையால் பட்டாசுகளை கொண்டு வருவதிலும், அவற்றை கிடங்கில் பாதுகாப்பதிலும் வியாபாரிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளையும் மக்கள் வந்து வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பட்டாசு வியாபாரிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
வழக்கமாக ஒரு வாரத்திற்கு முன்பே பாதியளவு பட்டாசுகளை விற்றுத் தீர்த்து விடும் வியாபாரிகள், இந்த ஆண்டில் இதுவரை பட்டாசு கடைகளுக்கு மக்கள் வர மழை இடையூறாகி விட்டதே என்ற கவலையில் உள்ளனர்.
என்றாலும் அடுத்த ஓரிரு நாட்களில் மழை நின்று, பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.