இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒன்றுபடுவோம்: கருணாநிதி!
திங்கள், 20 அக்டோபர் 2008 (17:40 IST)
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே' என்ற பாரதியின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
முதலமைச்சர் கருணாநிதி இன்று கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நேற்று ராமேஸ்வரத்தில் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்தியதை பாராட்டியுள்ளார்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே என்ற பாரதியின் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக 1987ம் ஆண்டிலிருந்து தி.மு.க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை அந்த கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி விரிவாக பட்டியலிட்டுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததற்காக 1991ம் ஆண்டு தி.மு.க அரசு கலைக்கப்பட்டதாகவும் கருணாநிதி அதில் தெரிவித்துள்ளார்.
தற்போது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், வேறு சிலரும் தமிழகத்திலே ஆட்சியில் இருந்து ஏன் விலகக்கூடாது என்று கேட்பதை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, 1998ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் பிரதமரிடம் ஜெயலலிதா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டு மனு ஒன்றை அளித்ததாகவும், அதில் இலங்கை தமிழர்களின் தாயகமான வடக்குப்பகுதியையும், கிழக்குப்பகுதியையும் இணைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதிக்கொடுத்தார்களே தவிர அப்படி செய்யத் தவறினால் ஆட்சியில் இருக்கு விலகிக்கொள்வோம் என்று எழுதித்தரவில்லை என்று கூறியுள்ளார்.
அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டு முன் உதாரணம் படைக்காத ஜெயலலிதா, இப்போது தி.மு.க மட்டும் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நாம் அனுப்பிய தீர்மானங்களை மிகவும் அனுதாபத்தோடு ஏற்றுக்கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக செய்திகள் வருவது, நமக்கு ஆறுதலை தருகிறது. இலங்கை அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசியிருக்கிறார். நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு நேரில் செல்ல இருக்கிறார்.
பிரதமர் பேசிய பேச்சின் விளைவாக அவர் பேசிய அன்றைய தினமே 2 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்களுக்கு ஐ.நா. அனுப்பிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே நம்முடைய முயற்சி வீண்போக வில்லை என்பது ஆறுதல் தருகிறது என்றும் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்க தி.மு.க.வினர் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.