தேசிய முற்போக்கு திராவிடர் கழக இளைஞர் அணி மாநாட்டையொட்டி சென்னையில் சனிக்கிழமை நடந்த பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர் விஜய்காந்த், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தாக்கிப் பேசினார்.
5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த ஊர்வலம் நிறைவடையும் வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனி மேடையில் நின்று பார்வையிட்டார். இந்த ஊர்வலத்தால் சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
தேமுதிக இளைஞரணியின் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. முன்னதாக மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே பேரணியை மாநில இளைஞரணிச் செயலர் சுதீஷ் தொடங்கி வைத்தார்.
உடனே கட்சிக் கொடியைப் பிரதிபலிக்கும் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
இந்த ஊர்வலத்தில் பட்டுக் குஞ்சங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவாறு தேமுதிக கட்சிக் கொடியில் உள்ள சிவப்பு, மஞ்சள், கருப்பு வண்ணத்தில் ஆன குடைகளை தொண்டர்கள் ஏந்தி வந்தனர்.
மேலும் கின்னஸ் சாதனைக்காக 200 அடி நீளமுள்ள பேனர், 100 அடி நீளமுள்ள கொடியை தொண்டர்கள் ஊர்வலத்தில் எடுத்து வந்தனர்.
முளைப்பாரியுடன் கரகாட்டம், மயிலாட்டம், ராஜா-ராணி ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டத்துடன் தொண்டர்கள் பேரணி நடைபெற்றது.
வில்-அம்பு, கதை ஏந்தியவாறு புராண கால கதாபாத்திரங்களின் வேடம் அணிந்த தொண்டர்கள் ஆங்காங்கே காட்சி அளித்தனர்.
இதில் விஜயகாந்த் போல பல்வேறு "கெட்-அப்' களில் ஒப்பனை செய்யப்பட்ட இளைஞர்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவரை விஜயகாந்த் போல வேடமிட்டவர் ஒருவர் பேரணியில் அழைத்துச் சென்றார்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை விமர்சிக்கும் வகையில், மெழுகு வர்த்திகளை ஏந்தியவாறும், மண்ணெண்ணெய் விளக்குகளையும் எடுத்து வந்தனர்.
பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்த ஊர்வலம் இரவு 8.15-க்குப் பின்னரும் நீடித்தது. கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப. கிருஷ்ணன் மற்றும் விஜயகாந்தின் 2 மகன்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.