மயிலாடுதுறையில் கோவில் அருகே மசூதி கட்ட சிலர் திட்டமிட்டு இருப்பதாவும், உடனே நேரில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மயிலாடுதுறை பிரதான கடைவீதியான பட்டமங்கள தெருவில் காவிரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு மிக அருகில் உள்ள தீன் மாளிகை வணிக வளாகத்தின் மாடிப்பகுதியில் முஸ்லிம்கள் திடீரென ஒலிபெருக்கி வைத்து தொழுகை நடத்த தொடங்கியுள்ளனர்.
அதுபோன்றே நாராயண பிள்ளைத் தெருவில் கிராண்ட் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்திலும் தொழுகை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த இடங்களை மெல்ல மெல்ல மசூதிகளாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பாரம்பரியமான சுவாமி வீதி உலா வரும் பட்டமங்கலத் தெருவில் பிரபலமான ஆலயத்திற்கு அருகில் திடீரென மசூதிகள் தோற்றுவிப்பது எதிர்காலத்தில் சமுதாய நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்புகளின்படி இந்து ஆலயங்களுக்கு அருகிலும், சுவாமி வீதியுலா வரும் பாதையிலும் புதிய மாற்று மத வழிபாட்டுத் தலங்கள் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
1980-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரத்திற்கு பின் அதுபற்றி ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷனும் இதுபற்றி தெளிவாக கூறியுள்ளது.
ஆகவே, இந்த இடங்களை நேரில் ஆராய்ந்து இதுபோன்று அனுமதியில்லாமலும், புகழ்பெற்ற ஆலயங்களுக்கு மிக அருகாமையிலும் திடீர் திடீரென தோற்றுவிக்கப்படும் மசூதிகளை அகற்றி இந்து ஆலயங்களின் புனித தன்மைக்கு மாசு ஏற்படாமலும் சமூக நல்லிணக்கத்திற்கும், நகரின் அமைதிக்கும் வழிவகுக்க அரசை வேண்டுகிறேன்'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.