இலங்கை அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்!
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:58 IST)
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
உண்ணாவிரத்தின் போது சிங்கள இராணுவத் தாக்குதலில் உயிரிழந்த தமிழர்களுக்கு வழக்கறிஞர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் நடந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமை வகித்தார். ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.