இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனவெறி அழிப்பை நடத்தி கொண்டிருக்கும் ராஜபக்சேவின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார் என்று குற்றம்சாற்றியுள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர், அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலையை பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ் பகைவர்களின் கைபொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதலமைச்சர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஈழத் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து இலங்கை இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் இணைந்து கூட்டாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதை திசை திருப்பும் வகையில் முதலமைச்சரை மட்டுமே பிரித்து குற்றம்சாற்றுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.
தங்கள் மக்களையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள விடுதலைப்புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியை கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனிதநேய உணர்வின்றி இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டு, அங்குள்ள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித்தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்த போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.
தமிழர்களுக்கு எதிரான இனவெறி அழிப்பை நடத்தி கொண்டிருக்கும் ராஜபக்சேவின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர், அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலையை பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ் பகைவர்களின் கைபொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.