த‌னி‌த்த‌மி‌ழ் ஈழ‌ம்தா‌ன் ‌நிர‌ந்தர ‌‌தீ‌ர்வு: பா.ம.க செயற்குழு தீர்மானம்!

வியாழன், 16 அக்டோபர் 2008 (10:31 IST)
இலங்கை‌த் தமிழர் பிரச்‌‌சனைக்கு தனித்தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வாகும் எ‌ன்று‌ம் விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசும், த‌மிழக அரசு‌ம் எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம் பா.ம.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டது.

விழு‌ப்பு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் பா.ம.க தலைமை செயற்குழு கூட்டம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ராமதா‌ஸ் தலைமை‌யி‌ல் நேற்று நடைபெ‌ற்றது.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌‌‌தீ‌ர்மான‌‌ங்க‌ள் வருமாறு: இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவியும், போர்ப்படை பயிற்சியும் அளிப்பதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி வரும் இலங்கை கடற்படையினரின் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சென்னையில் நேற்று முன்தினம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு பா.ம.க.செயற்குழு முழு ஆதரவு தெரிவிக்கிறது.

இந்த கோரிக்கைகளை எல்லாம் 15 நாட்களுக்குள்ளாக நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்குள்ளாக நிறைவேற்றி வைக்காவிட்டால் தமிழத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவையும் பா.ம.க. முழுமனதோடு ஆதரிக்கிறது.

இலங்கை‌த் தமிழர் பிரச்‌‌சனைக்கு தனித்தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாகும். விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசும், தமிழக அரசும், முதலமைச்சரும் எடுக்க வேண்டும்.

வீடுகளுக்கு 24 மணி நேரமும், விவசாயத்துக்கு குறைந்தது 8 மணிநேரமும், சிறுதொழில்களுக்கும், விசைத்தறிகளுக்கும் பகல் நேரத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

பெரிய தொழில்நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை வைத்து இருந்தால், முழுக்க, முழுக்க அவற்றை இயக்கி மின்தேவையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்த வேண்டும்.

மாநிலத்தில் உள்ள அனல் மின்நிலையங்களில் முழு அளவிலான மின்உற்பத்தி செய்யப்படாததற்கு தரமற்ற நிலக்கரி உபயோகப்படுத்தப்படுவது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுவதால், அது குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்களுக்கும், விரிவாக்கத்திட்டங்களுக்கும் தேவையான நிலத்தை தாமதமின்றி ஒதுக்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்