கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசு தீவிரம்: ஸ்டாலின்
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (16:23 IST)
தமிழகத்தில் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசு மேம்படுத்தும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
கரூரில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு தனித்தனி அமைச்சர்களை முதல்வர் கருணாநிதி நியமித்ததன் மூலம் ஏற்கனவே ஒரே துறையாக இருந்த கல்வித் துறை இரு துறைகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டினார்.
கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்ததன் பேரிலேயே பள்ளிக்கல்வித் துறை தனியே பிரிக்கப்பட்டு தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கட்டமைப்பு வசதிகள், மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கரூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மேம்பாட்டுப் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.