அறிஞர் அண்ணாவின் 100-வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் கடந்த 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களின் விடுதலையை எதிர்த்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறுவிசாரணை நடைபெறும் அக்டோபர் 30ஆம் தேதி வரை தமிழக அரசின் உத்தரவுப்படி 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தது தற்காலிகமாக செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜாராமன், சதீஷ், கிருஷ்ணராஜ், செந்தில்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ''கடந்த ஆண்டு ஆந்திரா மாநில அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு 1500 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும்வரை, தமிழகத்தில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது'' என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, தமிழக அரசு 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டி இருப்பதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்பு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதிகள் விடுதலை எதிர்ப்புக்கு போதுமான தகவல்கள் தரப்படவில்லை என்று கூறி வழக்கறிஞர்களின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.