இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் முன்னதாகவே தோல்வி அடைந்து விட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அறிவித்துள்ளது. மேலும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
எனவே, முதலமைச்சர் கூட்டியுள்ள இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டமாகவே தற்போது அது மாறியுள்ளது.
இலங்கை பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை என்பதால் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அவர்களது உறுதியற்ற தன்மையை பிரதிபலிப்பதாகவே அமையும்.
அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த அயல்நாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மக்களின் பணம் வீணாக்கப்படுகிறது'' என்று சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.