இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை பா.ஜ.க. புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல. கணேசன் அறித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை ராணுவத்துக்குத் துணைபோகும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
தனக்கு உள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மத்திய அரசு உடனடியாக தனது கடமையை செய்யும்படி வலியுறுத்துவதை விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் எந்த தீர்மானம் நிறைவேறினாலும் அது இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்தவித நன்மையோ தமிழ் மக்களை திருப்பதுத்துவதாகவோ அமையப் போவதில்லை.
இலங்கைவாழ் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பா.ஜ.க. உறுதியுடன் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இருந்தாலும் செயல்படாத மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கூட்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று சனிக்கிழமை கூடிய மாநில உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டது" என்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்.