இலங்கை தமிழர் பிரச்சினையில், மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளபட அக்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் ம.தி.மு.க. சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.
சென்னை அண்ணா சாலை, காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில் ஆயிரக்கணக்கான ம.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். தொண்டர்களிடையே பேசிய வைகோ, மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ ரீதியாக வழங்கி வரும் உதவிகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதில் இந்தியா வழங்கிய ராடார் கருவிகளை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்
இதற்கு பதில் அளித்த பிரதமர் தமிழர்களுக்கு எதிராக ராடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்திருந்தார். எனினும் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது என்றார்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருந்து பொருட்கள், உணவு ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி தரவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் தான் முக்கிய காரணம் என்று அப்போது அவர் குற்றம்சாற்றினார்.
ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக தந்தி கொடுக்கும்படி முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். கேட்ட இலாகாவை கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவி ஏற்க மாட்டோம் என்று மிரட்டல் விடுத்த அவருக்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று மிரட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அப்போது வைகோ கூறினார்.