பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடை சட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி பிறந்த நாளான நேற்று முதல் (அக்டோபர் 2) பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
webdunia photo
FILE
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 500 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் கூறுகையில், புகைப்பிடிப்பு தடை சட்டத்தை படிப்படியாகத் தான் அமல்படுத்த முடியும். முதல் கட்டமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம் என்றார்.
புகைப் பிடிப்பவர்களை காவல்துறையினர் பார்த்தால் அவர்களை எச்சரிக்கை செய்வதுடன், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்குவார்கள் என்றார்.
இந்த எச்சரிக்கை, விழிப்புணர்வு பிரசாரம் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் அதன் பிறகு நடவடிக்கையை தொடங்குவோம் என்று தெரிவித்த ஆணையர் சேகர், என்ன மாதிரி நடவடிக்கைகளில் இறங்குவது என்பது குறித்து அப்போது ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என்றார்.
புகைப் பிடிக்கும் தடை சட்டத்திற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆணையர் சேகர், அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் என்றார்.