ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது: கோ.சி.மணி!
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (10:54 IST)
மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று வேளாண்துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுக்கான விடைத்தாள் ஒளிவு மறைவின்றி மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளவில்லை என்பதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
மேலும், உயர் நீதிமன்ற ஆணை தொடர்பாக சட்ட வல்லுநர் கருத்து 30.9.2008-ல் பெறப்பட்டது. அதில் உயர் நீதிமன்ற ஆணை, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மட்டும் பொருந்தும் எனவும் மற்ற மத்திய கூட்டுறவு வங்கிகள் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு எந்தவித தடையுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தவிர்த்த எஞ்சிய 16 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும், 1.10.2008 மற்றும் 2.10.2008 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால் 4.10.2008 அன்று தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்து முடிவுகளை அன்றே வெளியிடுவதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உண்மையை அறிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களுடன் அறிக்கையை முன்னாள் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் கோ.சி.மணி கூறியுள்ளார்.