தமிழகம் முழுவதும் கோயில்களில் நிரந்தர கண்காணிப்பு கேமரா: அரசு முடிவு!
வியாழன், 2 அக்டோபர் 2008 (13:40 IST)
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பாதுகாப்பு நடவடிக்கையினை வலுப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்தும், அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், அறநிலையங்கள்துறை செயலர் க.முத்துசாமி, முதன்மை செயலர்-ஆணையர் த.பிச்சாண்டி, காவல்துறை கண்காணிப்பாளர்(குற்றப்புலனாய்வுத்துறை) கே.என். சத்தியமூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. திருக்கோயில்களின் எல்லைக்குட்பட்ட, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, திருக்கோயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் திருக்கோயில்களிலும், வழிபாட்டு தலங்களிலும், பிற முக்கிய திருக்கோவில்களிலும் நிரந்தரமான கண்காணிப்பு கேமரா பொருத்திடவும், மேற்படி நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மைய கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், மேலும் பாதுகாப்புக்கு தேவையான கள்வர் எச்சரிக்கை மணி, கோள் சொல்லி கடிகாரம், (டெல் டேல் கிளாக்) மற்றும் தீயணைப்பு கருவிகள் போன்ற சாதனங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கவும், இரவு பகல் இரு நேரமும் காவல் பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக திருக்கோயில் செயல் அலுவலர்களும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, அடிக்கடி தொடர்பு கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, வலுப்படுத்தவும் வழிபாட்டுத்தலங்களுக்கு தேவையான கூடுதல் பாதுகாப்பினை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.