போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு!
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:37 IST)
தீபாவளியை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அளிக்கப்படுவது வழக்கம். பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உச்சவரம்பு இன்றி, கடந்த ஆண்டை போலவே போனஸ் வழங்கப்படும் என்று கடந்த வாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, அவர்களுக்கு தீபாவளி போனஸ் அளிக்கப்படுவது தொடர்பாக, சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில், இன்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிலாளர் சங்கம், தொ.மு.ச. பேரவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்க பேரவைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அரசுத் தரப்பில் போக்குவரத்துத் துறை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 20 விழுக்காடு போனஸ் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. 8.33 விழுக்காடு குறைந்த பட்ச போனசும், 11.67 விழுக்காடு கருணைத்தொகையும் வழங்கப்படுகிறது. பண்டிகை முன்பணம் கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.2000 வழங்கப்படும் என்று அமைச்சர் நேரு அறிவித்தார்.
இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.90 கோடி செலவு ஏற்படும். இந்த போனஸ் அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.