இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது: கி.வீரமணி!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:38 IST)
''மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்விலும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேருவதிலும் இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''மருத்துவக் கல்வித்துறையில் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பெரும் தவறையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு எத்தனை ‌விழு‌க்காடு என்று குறிப்பிடப்படவில்லை. கலந்தாய்வு என்பது அந்தந்த பிரிவினருக்கான தனிப்பட்ட தகுதி அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், ஒட்டுமொத்தமான தகுதி அடிப்படையில் அது இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பொருள்- தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பொதுப்போட்டியில் கொண்டு வரப்படமாட்டார்கள். அவரவர்களுக்குரிய ஒதுக்கீட்டு பகுதியில் மட்டுமே கணக்கிடப்படுவார்கள். இதன்மூலம் சட்டப்படி இடஒதுக்கீடு பெறாத பிரிவினரான உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களும் கிடைக்கும். இதில் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சி பொறியிருக்கிறது.

அதே போல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் என்று அழைக்கப்படும் மருத்துவ கல்லூரி நிறுவனத்தில் சேருவதிலும் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. ஆண்டுக்கு 2 முறை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் தாழ்த்தப்பட்டவர்களானாலும், முன்னேறிய ஜாதியினர் ஆனாலும் தகுதி மதிப்பெண் என்பது ஒரே அளவில் அதாவது 50 ‌விழு‌க்காடு பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு நடைபெறும் அகில இந்திய தேர்வுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு தகுதி மதிப்பெண் 40 ‌விழு‌க்காடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த வேறுபாடு? எய்ம்ஸ் மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டதா? அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் இந்த இருவகை மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமை‌ச்ச‌ர் அன்புமணி ராமதாஸ் இதில் போதிய கவனம் செலுத்தாதது ஏன்? இதற்கான பொறுப்பு அவரை சார்ந்ததுதானே? சமூக நீதியில் இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது. அதனை சரி செய்து தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு'' எ‌ன்று ‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.