மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாக்க தீவிரவாதிகள் சதி: உளவுப் பிரிவு எச்சரிக்கை!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (10:36 IST)
தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்பட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் குறிவைத்துள்ளதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள பிரசித்திப் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முதல் தாக்குதல் இலக்காக உள்ளது என்றும் மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், பழனி முருகன் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் உள்பட முக்கிய கோயில்கள் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே மத்திய உளவு பிரிவில் இருந்து குறிப்பிட்ட இந்த தகவல் வந்து கொண்டிருந்ததாகவும், இதனைத் தொடர்ந்தே தமிழகத்தில் உள்ள அனைத்துக் முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு நிலைமை குறித்து முதலமைச்சர் கருணாநிதி, காவல் துறை தலைமை இயக்குனர் (DGP) மற்றும் உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் குண்டு வெடிப்பு மற்றும் கைது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் இது போன்ற தீவிரவாத மிரட்டல்கள் வழக்கமான விவகாரம் என்றும் தீவிரவாத மிரட்டல்கள் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.