பல்கலைக்கழக அளவிலான கபடி போட்டி: காமதேனு கல்லூரி முதலிடம் பெற்று சாதனை!
புதன், 24 செப்டம்பர் 2008 (13:13 IST)
பல்கலைக்கழக அளவிலான கபடி போட்டியில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி ரூ.10,000 பரிசு வழங்கினார்.
பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கிடையிலான கபடிபோட்டி கோவை நேரு கலைஅறிவியல் கல்லூரியில் நடந்தது. நான்கு நாட்கள் நடந்த இந்த போட்டியில் மொத்தம் 52 அணிகள் கலந்துகொண்டது.
இதில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி வீரர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் முதல் மூன்று சுற்றுப்போட்டிகளில் வெற்றிபெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கால் இறுதி போட்டியில் காமதேனு கலை அறிவியல் கல்லூரியும், கோவை கலைமகள் கல்லூரியும் மோதியது. இதில் 1,228 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி அணி வெற்றிபெற்று லீக் சுற்றிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மூன்று லீக் போட்டிகளில் வெற்றிபெறும் அணியே முதலிடம் பிடிக்கும். அவ்வகையில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி அணி முதல் லீக் போட்டியில் ஈரோடு கலைக்கல்லூரி அணியுடன் மோதியது. இதில் 2,028 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரண்டாவது லீக் போட்டியில் கோவை அரசு கலைக்கல்லூரி அணியுடன் மோதியது. இதில் 1,518 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி வெற்றிபெற்றது.
மூன்றாவது மற்றும் இறுதி லீக் போட்டியில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு சி.என்.சி. கல்லூரி அணியும் மோதியது. இதில் 1,122 புள்ளிகள் வித்தியாசத்தில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி வெற்றிபெற்று பாரதியார் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றது.
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கி சாதனை படைத்த கபடி வீரர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கி கௌரவித்தார்.
அணியின் சிறந்த விளையாட்டு வீரராக தர்மலிங்கத்திற்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி விழாவில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு ரூ.3,000 வழங்கினார். சாதனை படைத்த வீரர்களை முதல்வர் சிவானந்தம் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பாராட்டினர்.