''
சென்னை மக்களுக்கு பொங்கல் முதல் கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட சென்னையில் உள்ள மீஞ்சூரில் காட்டுப்பள்ளி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடி நீராக்கும் தொழிற்சாலைக்கான திட்டப்பணிகளை மேற்பார்வையிட்ட அவர், பொங்கல் பண்டிகைக்கான பரிசாக இந்த குடிநீர் இருக்கும் என்று கூறினார்.
இந்த தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு அளவுக்கு முடிந்து விட்டது என்றும் முழுப் பணிகளும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திக்குள் முடிவடைந்து விடும் என்றும் கூறிய அவர், இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.48.66 என்ற வீதத்தில், 25 ஆண்டுக்கும் மேல் குடிநீர் பெற்றுக்கொள்ள சென்னை மெட்ரோ வாட்டர், ஐ.வி.ஆர்.சி.எல். என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ரூ.93 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.